அஆநீழி

அரவிந்தனின் ஆழி பெரிது புத்தக வெளீயீடு திருவான்மியூரில் நடைபெறும் ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சி வளாகத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது.

எழுத்தாளர் ஜோ டி க்ரூஸ், கல்வெட்டு ஆய்வாளர் எஸ். ராமச்சந்திரன், பேராசிரியர் அறிவழகன், ம. வெங்கடேசன், ஜடாயு, ஓகை நடராஜன் இன்னும் பல சிலர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

மேடை உண்டென்றாலும் மைக்கெல்லாம் கிடையாது. நட்புபூர்வமான விழா.

ஜோவின் எளிமை பார்க்கும்போதெல்லாம் நாணமுற வைக்கிறது. எப்பேர்ப்பட்ட கலைஞன், இத்தனை எளிமையாக இருக்கிறாரே என்று நினைக்காதிருக்க முடியவில்லை. காலந்தோறும் பயின்றவாறே இருப்பதற்குக் கடவுள் எனக்கு இம்மாதிரி யாரையாவது எப்போதும் அனுப்பியபடியே இருக்கிறான்.

புத்தகம் விரும்புவோர் முதல், போட்டுத்தள்ள விரும்புவோர் வரை வரலாம் என்று அநீ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தாலும் வந்திருந்த யாவரும் அவரது நண்பர்களும் ரசிகர்களுமே. இந்தப் புத்தகம் இளைய தலைமுறையினரிடம் போய்ச்சேர வேண்டியதன் முக்கியத்துவத்தை நான் சற்று வலியுறுத்திப் பேசினேன்.

விழா முடிந்த பிறகு புரிதல் பிரச்னை குறித்து ஓரிருவர் சாங்கோபாங்கமாகத் தமது கவலையை முன்வைத்தார்கள். அரவிந்தனையெல்லாம் பிடி சாமி வேகத்தில் படித்தெறிய விரும்புவது பயங்கரவாதத்தில் சேர்த்தி என்று பதில் சொன்னேன்.

வாழ்வில் எது எதற்கெல்லாமோ நேரத்தை வீணாக்கிக்கொண்டிருக்கிறோம். ஒரு சிறந்த நூலை வாசிக்க ஓரிரு தினங்கள் மெனக்கெட்டால் ஒன்றும் குடிமுழுகிவிடாது.

படித்து முடிக்கும்போது அரவிந்தனைத் திட்டுவதற்கு எக்கச்சக்கமான விஷயங்கள் அகப்படும் என்னும் ஒரு லாபமும் இதில் உள்ளது. அதற்காகவாவது மெனக்கெட்டுப் படித்துவிடுங்கள்.