எழுதித் திரிந்த காலம்

என் நண்பர் புதுவை ரஜினியின் புதிய கட்டுரைத் தொகுப்பு ‘எழுதித் திரிந்த காலம்’வெளிவந்திருக்கிறது. பல்வேறு காலக்கட்டங்களில் ரஜினி பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகள் இவை. படிக்க சுவாரசியமான சொந்த அனுபவங்கள்.

அது அல்ல விஷயம். இந்தப் புத்தகம், எழுத்தாளர் சொந்தமாகப் புத்தகம் வெளியிடும் நூற்றாண்டு காலக் கலாசாரத்துக்குப் புதிய பரிமாணம் அளித்திருக்கிறது.

ரஜினிக்கு கைக்காசு செலவழித்துப் புத்தகம் போடுகிற வசதியெல்லாம் கிடையாது. எனவே அவர் வசிக்கும் பாண்டிச்சேரியில் உள்ள பல வர்த்தக நிறுவனங்களை அணுகியிருக்கிறார். யார் எந்தளவு உதவினார்களோ தெரியாது. ஒவ்வொரு கட்டுரை முடியும் இடத்திலும் கால் பக்கத்துக்கு சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு ஒரு விளம்பரம் கொடுத்திருக்கிறார். சீரியல்களையும் கேம் ஷோக்களையும் மட்டும்தான் வர்த்தக நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்ய வேண்டுமா? எழுத்தாளர்களின் கட்டுரை, கதைகளையும் செய்யலாம்.

சுவாரசியமான வாசிப்பு அனுபவம் தரும் இந்தக் கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் விளம்பரங்களும் சுவாரசியமானவையே. வீராதரன் ஏஜென்சீஸும் சந்திரா எலக்ட்ரிக்கல்ஸும் ஜென்னீஸ் அகடமியும் நித்யா பேக்கேஜிங் பிரைவேட் லிமிடெடும் இன்ன பிற நிறுவனங்களும் இலக்கியத்துக்கு இத்தனை தூரம் சேவை செய்ய முன்வந்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். வாங்கிப் படிப்பது ஒன்றே வாசகவேலை.

ரஜினியின் இந்தப் புத்தகத்தைக் காசு கொடுத்து வாங்கிப் படிக்க சிபாரிசு செய்கிறேன். [வெளியீடு: புதுவை ரா ரஜினி, 32 வழுதாவூர் சாலை, பேட்டையான் சத்திரம், புதுச்சேரி – 605009. போன்: 0413-2273212. மின்னஞ்சல்: pudhuvairajani@gmail.com]

இம்மாதிரியான முயற்சிகளை ஊக்குவிப்பது ஐபிஎல் பார்ப்பதைவிட அவசியமானது.