மொசார்ட் – முன்னுரை

மொசார்ட்டை எனக்குப் பிடிக்கும். எத்தனை பிடிக்கும் என்றால் எனக்கு இளையராஜாவைப் பிடிக்கும் அளவுக்கு மொசார்ட்டையும் பிடிக்கும். பல சமயங்களில் ராஜாவுக்கும் மொசார்ட்டுக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை என்று தோன்றும். இப்படிச் சொல்வதை சனாதனவாதிகள்  அபத்தம் எனலாம். அது குறித்து எனக்குக் கவலையோ அக்கறையோ கிடையாது. மொசார்ட்டை நான் இளையராஜா மூலமாகத்தான் அறிந்தேன். ராஜாவின் பல வேலைப்பாடுகளில் மொசார்ட்டின் தாக்கத்தைப் பார்த்திருக்கிறேன். இது மகனுக்கு இருக்கும் தந்தையின் ஜாடை போன்றது. ரொம்ப உள்ளே போக எனக்கு விருப்பமில்லை. நான் இசைக்கு ரசிகன். என்னளவில் இசை என்றால் இளையராஜா மட்டுமே. மகன் வழி தந்தையைக் கண்டடைந்தவன் என்பதை மட்டும் மறக்காமல் சொல்லிவிட வேண்டும்.

இந்தப் புத்தகம் ப்ராடிஜி வெளியீடாக முதலில் வெளிவந்தது. நான் ரொம்ப ஆசை ஆசையாக எழுதிய புத்தகம் இது. இந்த ஒரு சிறு நூலுக்காகக் கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் மொசார்ட்டின் அத்தனை இசைக்கோலங்களையும் இடைவிடாமல் கேட்டேன். பலவற்றை ஏற்கெனவே கேட்டிருந்தாலும் அத்தனை நுணுக்கமாக முன்னர் கேட்டிருக்கவில்லை. எனக்கென்னவோ மொசார்ட்டின் இசை என்பது அவரது வாழ்வின் மொழிபெயர்ப்பாகவே எப்போதும் தோன்றும். ஏழைமையும் நிராகரிப்பும் அவலங்களும் வேதனைகளும் எந்தக் கலைஞனுக்கு இல்லை? ஆனால் தன்னைத்தானே விழிப்புடன் கவனித்து, தனது வாழ்வை இசையில் எழுதி வைத்தவர்கள் அதிகமில்லை.

மிகப் பிற்காலத்தில் யானி இதனைக் கொஞ்சம் முயற்சி செய்திருக்கிறார். (யானி குறித்த என்னுடைய புத்தகத்தில் இது பற்றிய விவரங்கள் விரிவாகவே இருக்கும்.) இந்தியாவில் பூபேன் ஹஸாரிகா, நௌஷாத் போன்ற வெகுசிலர் முயற்சி செய்திருக்கிறார்கள். ராஜா ஏன் செய்யவில்லை என்பது எனக்கு எப்போதும் ஆச்சரியமூட்டும் வினா.

இருக்கட்டும். இந்தப் புத்தகத்தில் மொசார்ட்டின் வாழ்க்கைச் சுருக்கத்தை எழுத நான் தேர்ந்தெடுத்த சொற்களின் ஊடாக அவரது இசை ஒலிக்க வேண்டும் என்ற பேராசை எனக்கு இருந்தது. நீங்கள் இதற்குமுன் மொசார்ட்டைக் கேட்டிருக்கக்கூட வேண்டாம். ஆனால் இதைப் படிக்கும்போது உங்கள் காதுகளில் ஒரு சங்கீதம் ஒலிக்க வேண்டும். அப்படி ஒலித்துவிட்டால் அது அவரது சங்கீதமாகத்தான் இருக்கும்.

எப்பேர்ப்பட்ட பேராசை! ஆனால் அந்தப் பேராசைதான் என்னை இந்த நூலை எழுதவைத்தது.

இதுநாள் வரை நான் எழுதிய அனைத்திலும் பார்க்க, மொழி ரீதியில் எனக்கு மிகவும் உவப்பான புத்தகம் இதுவே. எல்லாமே சரியாக உட்கார்ந்துவிட்டது என்று ஒரு நினைப்பு. யார் யாருக்காகவோ என்னென்னவோ செய்கிறோம். இந்தப் புத்தகம் எனக்காகவே நான் எழுதிக்கொண்டது.

எனக்கு 43 வயதாகிறது. பல வீடுகள் மாறியிருக்கிறேன். பல ஊர்கள் மாறியிருக்கிறேன். பல நிறுவனங்களில் பணியாற்றி இடம் மாறியிருக்கிறேன். பல நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். பல உறவினர்கள் இருந்திருக்கிறார்கள். பலர் உதிர்ந்திருக்கிறார்கள். புதிதாகப் பலர் இணைந்திருக்கிறார்கள். நானே கூட எப்படி எப்படியெல்லாமோ இருந்து என்னென்னவாகவோ மாறியிருக்கிறேன். என் விருப்பங்கள், ரசனைகள், ஆர்வங்கள் யாவும் காலம்தோறும் மாறி வந்திருக்கிறது. நினைவு தெரிந்த நாளாக இன்றுவரை எந்த மாற்றமும் இல்லாமல் என் மனத்துக்குள் நான் ஆராதிக்கும் ஒரே விஷயம் இளையராஜாவின் இசை. தெய்வாம்சம் பொருந்திய அந்த மாகலைஞனுக்கு இந்த நூலை என் எளிய சமர்ப்பணமாக முன்வைப்பதில் மிகுந்த மனநிறைவு கொள்கிறேன்.

இனி இது உங்களுடையது.

[விரைவில் FreeTamilEbooks மூலம் விலைமதிப்பற்ற மின்னூலாக வெளிவரவிருக்கும் எனது ‘மொசார்ட்’ புத்தகத்துக்கு எழுதிய புதிய முன்னுரை.]

2 responses

 1. மிகவும் அருமையான விவரிப்பு. கடைசி பத்தியில் கண்களில் கண்ணீர் குளம். வாழ்த்துக்கள் !

 2. ஸார்.,

  உங்களின் யானி படித்திருக்கிறேன்.

  அதன் மூலமே Nostalgia (prelude), Stand in motion, One mans dream போன்ற அற்புதங்களை கேட்டடைந்தேன்.

  அதற்கு நன்றி.

  Waiting for mozart..

  கோபி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *